நாம் தமிழர் கட்சி சின்னமான கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதாலும் சின்னத்தை கோரி மிக தாமதமாக அவர்கள் விண்ணப்பித்ததாலும் சின்னம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.
இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் அது தொடர்பான விரிவான உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஆட்சி காலம் நிறைவடையும் 3 மாதங்களுக்கு முன்பு இலவச சின்னத்தை கட்சி கோரலாம் என்பதால், அதன் அடிப்படையில் கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் 10 (பி) என்பது, சின்னம் தொடர்பாக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என வலியுறுத்துகிறது.
ஒருவேளை இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒரே நாளில் இலவச சின்னத்தை கோரி விண்ணப்பித்திருந்தால் ஏற்கனவே சின்னம் யாருக்கு வழங்கப்பட்டதோ அவருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது அல்லது குலுக்கல் முறையில் சின்னத்தை தேர்வு செய்து வழங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சின்னமான கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் ஒருவேளை மனுதாரருக்கு சின்னத்தை வழங்கக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டால் அது தேர்தல் ஆணைய விதியை மீறும் செயலாகும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையமும் “விதி 10 பி-ன் கீழ் அந்தக் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதில் எந்த சட்ட விதிமுறை மீறலும் இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதி 10 (பி) பற்றி மனுதாரர் நன்கு அறிவார். இதனை பயன்படுத்தியே கடந்த காலங்களில் நாம் தமிழர் கட்சி இலவச சின்னத்தை பெற்றது என்பதும் வாதங்களின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது” எனக்கூறியது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.