ஓபிஎஸ் - ஈபிஎஸ் கையெழுத்திடுவது தொடர்பான வழக்கு ! நாளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை

ஓபிஎஸ் - ஈபிஎஸ் கையெழுத்திடுவது தொடர்பான வழக்கு ! நாளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை
ஓபிஎஸ் - ஈபிஎஸ் கையெழுத்திடுவது தொடர்பான வழக்கு ! நாளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை
Published on

ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை நாளை டெல்லி உயர்நீதிமன்றம் அவசரமாக விசாரிக்கிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. அதன்படி அமைச்சர்களின் வாரிசுகள் உட்பட 1,700 மேற்பட்டோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 

அந்த மனுவில் அதிமுக கட்சியின் விதிகள் படி, அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை நாளை  டெல்லி உயர்நீதிமன்றம் அவசரமாக விசாரிக்க உள்ளது. நாடாளுமன்றம், மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கவுள்ளது. இந்நேரத்தில் விருப்ப மனு கையொப்பம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வரவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜகவை, விமர்சித்ததற்காக கே.சி.பழனிசாமி கடந்த ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் முதல்வரை சந்தித்த அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர், ''கே.சி.பழனிசாமி அதிமுகவில் இணைந்துள்ளார் என்று எங்கள் தரப்பில் கூறவில்லை. சில கோரிக்கைகள் தொடர்பாகத்தான் தலைமைச் செயலகத்தில்  என்னை அவர் சந்தித்தார்''என்று தெரிவித்திருந்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com