ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என் பாளையம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன.
இந்தநிலையில், கூடக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த மான் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. நீண்ட நேரமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுற்றித்திரிந்த ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் மானை, அப்பகுதியில் இருக்கும் நாய்கள் துரத்திச் சென்றன.
இதனால் அச்சமடைந்த அந்த மான் குமரன் நகரில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் சென்று பதுங்கியுள்ளது. இதையறிந்த வீட்டின் உரிமையாளர், மானை துரத்தி வந்த நாய்களை அங்கிருந்து விரட்டிவிட்டு, சம்பவம் குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற டி.என் பாளையம் வனத்துறையினர், பயத்தில் இருந்த மானை அங்கிருந்து பத்திரமாக மீட்டுச் சென்றனர். தொடர்ந்துய் கொங்கார்பாளையம் அருகே டி.என் பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட வன எல்லையில் அந்த மானை விட்டனர்.