மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை ஒப்படைக்கக் கோரி, அவரின் உறவினர்களான தீபக் மற்றும் தீபா சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
போயஸ் தோட்டத்திலுள்ள வேதா நிலைய இல்லத்தை ‘அரசுடைமையாக்கியது செல்லாது’ என்ற நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அந்த இல்லத்தின் சாவியை விரைந்து தங்களிடம் ஒப்படைக்குமாறு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக் மற்றும் ஜெ.தீபா, சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைக்கு, அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் பதில் அளித்துள்ளார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்கி முந்தைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. முந்தைய அரசின் அந்த நடவடிக்கை செல்லாது என்றும், அதனை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. மேலும், ‘அந்த இல்லத்தை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க, மூன்று வாரத்திற்குள் தேவையான நடவடிக்கைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும்’ என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நேற்று முன்தினம் (நவம்பர் 25-ம் தேதி), “நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை, தீபக் மற்றும் தீபாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக, அரசின் ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.