மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்ககோரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என ஜெ.தீபா, ஜெ.தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகிய அதிமுக உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களாக ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு அவர்களும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தனர்.
மேலும் வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இதையும் படிக்கலாமே : முதியவரின் தொண்டை மற்றும் நாசியில் இரண்டு மாதமாக குடியிருந்த அட்டைப்பூச்சிகள்
இந்நிலையில் தீபா மற்றும் தீபக் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று ஆஜராகி, டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் வர இருப்பதால் அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில், வருடாந்திர பூஜைகள் செய்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதாலும், போயஸ் தோட்ட இல்லத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாலும், சொத்து நிர்வாக வழக்கில் தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருபாகரன், கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.