தமிழக வெற்றிக்கழகம்
தமிழக வெற்றிக்கழகம்புதிய தலைமுறை

விஜய் கொடியின் வரலாறு இதுதான்... வெளியான பிரத்யேக தகவல்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், வெளியிட்டார் கட்சியின் தலைவர் விஜய்.
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, இன்று சென்னை பனையூரில் உள்ள, கட்சித் தலைமை அலுவலகத்தில், வெளியிட்டார் கட்சியின் தலைவர் விஜய். சிகப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடியில் இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலர் இடம்பெற்றிருக்கிறது. இந்த நிறங்களும் சின்னங்களும் குறிப்பிடுவது என்ன என்பது குறித்து பார்ப்பதற்கு முன்பாக, தமிழக அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள் குறித்துப் பார்ப்போம்.

கட்சிகளும் கொடிகளின் விளக்கமும்!

வரலாற்றில் பல்லாண்டு காலமாக, ஒரு குழுவை அல்லது தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளமாக கொடிகள் இருந்திருக்கின்றன. மன்னாராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்த பிறகும் அந்தப் பழக்கவழக்கங்கள் மாறவில்லை. அந்தவகையில், அரசியல் கட்சிகளுக்கும் கொள்கைகள், சின்னம் போல கொடியும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், கொள்கைகளைப் பிரகடனப் படுத்தும் ஒரு அடையாளமாக கொடிகளே இருந்திருக்கின்றன. கொடிகளில் பயன்படுத்தப்படும் நிறங்களுக்கு ஒவ்வொரு கட்சியும், தனித்தனி காரணங்களைக் கொண்டிருக்கிறது.தவிர, அந்தகாலகட்ட சமூகத் தேவைகளின் பிரதிபலிப்பாகவும் கொடிகள் இருக்கும்.

திமுக

திமுக கொடி
திமுக கொடி

உதாரணமாக, தமிழ்நாட்டில் திமுக கொடியில் உள்ள கறுப்பு நிறம், அரசியல் பொருளாதார சமூக வாழ்விலுள்ள இருண்ட நிலையைக் குறிப்பதாகும். சிகப்பு நிறம், அந்த இருண்மையைப் போக்கி ஒளியை உண்டாக்கவேண்டும் என்பதைக் குறிப்பதாகவும் இடம் பெற்றிருக்கிறது.

அதிமுக

அதிமுக கொடியில், கறுப்புக்கும் சிகப்புக்கும் இடையில் ஒரு வெள்ளை நிறத்தில் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். திமுகவின் கொள்கைகளுக்கும் அதிமுகவின் கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

அமமுக 

அதிமுக கொடியில் அண்ணாவுக்குப் பதிலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவம் பொறித்திருப்பது அமமுக கொடி.

மதிமுக

அதேபோல, மதிமுகவின் கொடியில் திமுகவின் கொடியில் உள்ள நிறங்களோடு கூடுதலாக ஒரு சிகப்பு நிறம் இருக்கும்.

மதிமுக
மதிமுக

பாமக

அடுத்ததாக, பாமகவின் கொடியை எடுத்துக்கொண்டால், நீலம், மஞ்சள் மற்றும் சிகப்பு நிறம் இருக்கும். அது, பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் மதச்சிறுபான்மையினரை அடையாளப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவிலேயே பட்டியல் சமூகத் தலைமை இல்லாத ஒரு கட்சி, பட்டியல் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நீல நிறத்தைக் கட்சிக் கொடியில் சேர்த்தது பாமகதான்.

விசிக

விசிக கொடி
விசிக கொடி

விசிக கொடியில் உள்ள நீல நிறம், உழைக்கும் மக்கள் விடுதலையையும், சிகப்பு நிறம் விடுதலையை வென்றெடுப்பதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய போராட்ட வழியையும் குறிப்பதாகும். அதேபோல, நடுவில் உள்ள நட்சத்திரம் விடிவெள்ளியையும் குறிக்கும். நட்சத்திரத்தில் உள்ள ஒவ்வொரு கூம்பும் ஒவ்வொரு காரணத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல, பட்டியல் சமூகத் தலைமை கொண்ட ஒரு அரசியல் கட்சிக் கொடியில் சிகப்பு நிறத்தை முதலில் சேர்த்தது விசிகதான்.

இப்படி பல்வேறு விளக்கங்களையும் வரலாறுகளையும் கொண்டிருக்கின்றன கட்சிக்கொடிகள்.

விஜய் வெளியிட்டிருக்கும் கொடியின் வரலாறு என்ன?

இந்தநிலையில், இன்று விஜய் வெளியிட்டிருக்கும் கொடியில், சிகப்பு மற்றும் மஞ்சள் நிறமும் நடுவில் வாகை மலரும் இரண்டு போர் யானைகளும் இடம்பெற்றிருக்கின்றன. கொடிக்கான விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

நாம் கொடிக்கான விளக்கம் குறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்,

``சாதி, மதம் என எதன் பொருட்டும் எந்த ஏற்றுத்தாழ்வும் இருக்கக்கூடாது. நாம் அனைவரும் ரத்தத்தால் ஒன்றுபட்டவர்கள் என சமத்துவத்தைக் குறிக்கும் வகையிலேயே சிகப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றொரு சிகப்பு அனைத்தும் அனைவருக்கும் சமம் என்கிற பொதுவுடைமைத் தத்துவத்தைக் குறிக்கிறது. வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளது. வெற்றியின் குறியீடாக வாகை மலர் நடுவில் இடம்பெற்றிருக்கிறது. எதிரிகளை வீழ்த்தும் வெற்றிக் குறியீடுகளாக போர் யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன" என்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com