பழனி அருகே வயலூரில் நான்காயிரம் கோழிகளை கொன்று புதைக்க முயன்ற போது வாகனத்தை தடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது மேல்கரைப்பட்டி. இங்கு எவிஏஜென் என்கிற தனியார் கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளை கொன்று, வயலூர் அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புதைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக இன்று அதிகாலை இறந்த கோழிகள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டது.
நந்தகுமாரின் விவசாய தோட்டத்தில் இறந்த கோழிகளை புதைக்க இருக்கும் தகவல் அறிந்து, வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவர் மகுடீஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் பலரும் சம்பவ இடத்தில் குவிந்தனர். குழி தோண்டி கோழிகளை புதைக்க இருந்த நிலையில் அவர்களை தடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோழிகளை புதைக்க வந்த தனியார் நிறுவன அதிகாரிகள் கோழிகள் விற்பனை ஆகாததால் கோழிகளை கருணைக் கொலை செய்து புதைக்க வந்ததாகவும், கோழி இறைச்சி நிறுவனத்தில் நந்தகுமார் வேலை செய்பவர் என்பதால் அவரது சம்மதத்தோடு அவரது தோட்டத்தில் புதைப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கோழிகளை இங்கு புதைக்க கூடாது என்றும் வைரஸ் பாதித்த கோழிகளாக இருக்கலாம் எனவும், எனவே கோழிகளை புதைக்க கூடாது எனக் கூறி பொதுமக்கள் தடுத்தனர். அப்போது கோழி இறைச்சி நிறுவனத்திற்கு ஆதரவாக நெய்க்காரப்பட்டி பேரூர் கழக திமுக செயலாளர் அபுதாகீர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்தோர் பலரும் திமுக பேரூர் கழக செயலாளர் அபுதாகீர் கோழி இறைச்சியில் நிறுவனத்தில் கமிஷன் பெற்றுக் கொண்டு, இதே வேலையை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்முடிவில் கோழிகளை இப்பகுதியில் புதைக்க மாட்டோம் என்றும், இனிமேல் இப்பகுதியில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் நிறுவனம் உறுதி அளித்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனமும் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.