முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி அமைதி ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு அதிமுக என்ற பெயரில் ஒ.பிஎஸ்., இபிஎஸ் இணைந்து இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு நன்றி தெரிவித்து, முதல் அறிக்கை நேற்று வெளியானது.
இந்த நிலையில் அதிமுக தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நினைவு நாள் அமைதி ஊர்வலம் அதிமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஜெயலலிதாவுக்கு மலரஞ்சலி செலுத்தப்படும் எனவும் அதன்பின் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.