தூத்துக்குடியில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு கணடனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் தா.வெள்ளையன் தகவல் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அங்கு மரக்கடை நடத்தி வந்தார். இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20-ந்தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜெயராஜை போலீசார் திட்டியதாக தெரிகிறது. இதனால் போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பென்னிக்ஸ் போலீசாரிடம் சமாதானம் பேச முயன்றுள்ளார். இதனால் பென்னிக்ஸுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் 21-ந்தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென பென்னிக்ஸ் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், சிறைச்சாலைக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜும் அதிகமான காய்ச்சல் காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணைக் கைதிகள் இருவரும் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியும் காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்து இருப்பதாகாவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் தா.வெள்ளையன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் கூறும் போது “ காவல்துறையினரால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இந்தப் படுகொலையை கண்டித்து நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் முழுவதுமாக கடையடைத்து எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும்.இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசானது தலா ஒரு ரூ.1 கோடி ரூபாய் நிதியுதவியும் அரசு வேலையும் வழங்க வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் சமாதனத்திற்கு இடமே இல்லை. தவறு செய்ததும், திட்டமிட்டு பலிவாங்கியதும் காவல் துறை தான். இந்த இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.