"உள்ளே அதிகளவில் உயிர்க்கொல்லி கார்பன் மோனாக்சைடு வாயு உள்ளது. எனவே தீப்பெட்டி, மெழுகுவர்த்தியை எரியவிடாதீர்கள் மூச்சை உள்ளிழுக்காதீர்கள்" என எச்சரிக்கை தற்கொலை குறிப்பு எழுதிவிட்டு டெல்லியில் தாய், 2 மகள்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
புதுடெல்லியின் வசந்த் விஹாரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 55 வயதுடைய மஞ்சு ஸ்ரீவஸ்த்வா என்ற தாய், 30 வயதுடைய அங்கிதா மற்றும் 26 வயதுடைய அன்சுதா ஆகிய இரு மகள்கள் உட்பட மூவரும் எரிவாயு சிலிண்டரை திறந்து தற்கொலை செய்து கொண்டனர்.
மஞ்சுவின் கணவர் உமேஷ் ஸ்ரீவத்வா, கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்துவிட்டார் என்றும், அதன்பிறகு குடும்பத்தினர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மஞ்சுவும் நோய் காரணமாக படுத்த படுக்கையாக இருந்ததால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறினார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவல்களின்படி, " தற்கொலை செய்துகொண்ட அறையின் எல்லா கதவுகளும் ஜன்னல்களும் எல்லா பக்கங்களிலும் மூடப்பட்டிருந்தன. உள் அறையை சோதித்தபோது படுக்கையில் மூன்று சடலங்கள் கிடந்தன. அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, அறை முழுவதும் எரிவாயு நிரப்பட்டுள்ளது, கார்பன் மோனாக்சைடு அறையில் உள்ளதாக எச்சரிக்கும் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை." என்று தெரிவித்தனர்.