இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில் சசிக்குமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நந்தன். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
ஆதிக்க சாதிகள் நிறைந்திருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் என்ன நடக்கிறது? தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்பதே நந்தன் படத்தின் கதை. இப்போதிருக்கும் பட்டியலின தலைவர்கள் என்னவெல்லாம் சிக்கல்களை சந்திக்கின்றனர் என்பதை திரைப்படம் பேசியது. திரைப்படமாக விமர்சனங்களைச் சந்தித்தாலும், எடுத்துக்கொண்ட கதைக்காக பலரும் திரைப்படத்தை பாராட்டியே வருகின்றனர்.
இந்நிலையில், படக்குழு பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களுக்கு திரைப்படத்தை திரையிட்டுக்காட்டியது. படம் பார்த்த பஞ்சாயத்து தலைவர்கள் தங்களது அனுபவங்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
வட குரும்பூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி கூறுகையில், “எங்களை மாதிரி அடிமையாகவும் இருக்கக்கூடாது. எங்களை மாதிரி கொடுமையையும் அனுபவிக்கக் கூடாது” என்றார்.
எல்ராம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் வித்யா கூறுகையில், “ராஜினாமா செய்துவிடலாம் நம்மால் முடியாது என்றெல்லாம் அழுதிருக்கிறேன். கௌரவத்தை இழந்துவிட்டு வாழ முடியாது என்றெல்லாம் கூறியுள்ளேன். சுயமரியாதையை இழந்துவிட்டுதான் உட்கார்ந்துள்ளோம்” என்றார்.
தேவியகரம் கிராம ஊராட்சித் தலைவர் கலையரசி கூறுகையில், “தலைவராகி இரண்டு வருடங்கள் ஆனாலும், எனக்கென்று போர்டு வைக்க முடியவில்லை. அதிகாரிகளிடம் பேசியும் நடக்கவில்லை. பின் நானாகத்தான் வைத்துக் கொண்டேன். ஆனாலும், பிரச்னை செய்கிறார்கள்” என்றார்.
வேறு ஒருவர் கூறுகையில், “நந்தன் படத்தில் எங்கள் பிரச்னையில் முக்கியமான விஷயத்தை பேசியுள்ளார்கள். சுடுகாட்டுப் பிரச்னை. கிட்டத்தட்ட நான் இந்த பிரச்னையை 3 வருடமாக பேசி கலெக்டர் வரைகூட சென்றுள்ளேன். போராட்டம் செய்து எங்களது ஊருக்கு சுடுகாடு வேண்டும் என கேட்டுள்ளேன். இதுநாள் வரை வரவில்லை” என்றார்.
மற்றொருவர், “நந்தன் படத்தில் அடித்ததுபோல் என்னையும் உள்ளாடைகளுடன் அடித்தார்கள். மக்கள் முன்னால் என்னை எட்டி உதைத்தார்கள். அதை ஒருத்தர் வீடியோ எடுத்து பாதுகாத்து வைத்துகொள்வார்” என்றார்.
திருச்சிழி ஊராட்சி தலைவர் பேசுகையில், “எத்தனையோ அரசு விழாக்கள் நடக்கும். எதற்கும் எங்களை அழைத்ததில்லை” என்றார்.