தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது.
தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றது. புரெவி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த புயல், நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. நேற்று மாலையில் புரெவி புயல் திரிகோணமலையில் இருந்து கிழக்கு திசையில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 550 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இதனால், திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்யது. கடல் கொந்தளிப்பான நிலையிலும் காணப்பட்டது. வானிலை மையம் கணித்தபடியே நேற்றிரவு திரிகோணமலை அருகே புரெவி கரையை கடந்தது. தற்போது பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் இருக்கும் புரெவி புயலானது பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புயலானது மணிக்கு 12 கி.மீ தொலைவில் பாம்பனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இலங்கையில் புரெவி புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இரவு 2 மணி முதல் பாம்பனில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையை அடுத்து மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் 209 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் மின் ரம்பங்கள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாதிப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் தேங்கியது.