புயல் எதிரொலி காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மிக்ஜாம் புயலாக மாறியது. இதன் காரணமாக 13 மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புயல் எதிரொலி காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “’மிக்ஜாம்’ புயல் காரணமாக நாளை அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பால், குடிநீர், மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் புதிய தலைமுறைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், “தனியார் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றுகின்ற மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.அதனை மனதில் வைத்து கொண்டு அவர்கள் செயல்பட வேண்டும் என்று அரசின் சார்பாக கேட்டு கொள்கிறோம். மேலும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்.” என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.