ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது! - வானிலை மையம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது! - வானிலை மையம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது! - வானிலை மையம்
Published on

புரெவி புயல் வலுவிழந்தபோதிலும் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுகுறித்த டிசம்பர் 4ஆம் தேதி இரவு 11 மணி வரையிலான அப்டேட்ஸ்...

டிச.04 - 08.50 PM: மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது; தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


டிச.04 - 07.38 PM: சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியிருப்பதால், இப்பகுதியில் வசிக்கும் 165 குடும்பங்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

பள்ளிக்கரணை ஏரி நிரம்பினால் உபரிநீர் நாராயணபுரம் ஏரியை அடைந்து, அங்கிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக மழைநீர் கடலில் கலக்கும். ஆனால் போதிய வாய்க்கால் வசதிகள் செய்யப்படாததால், குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதியில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 3 ஆண்டுகளாக நிறைவடையவில்லை என அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஏரி நீருடன் சேர்ந்து பாம்பு, பூச்சிகள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

டிச.04 - 07.28 PM: ராமநாதபுரம் தனுஷ்கோடியில் பெய்த கனமழையால் நூற்றாண்டு பழமைவாய்ந்த தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்தது. 

டிச.04 - 07.20 PM: கனமழை காரணமாக கடலூரில் டிச.5,6 இல் நடைபெறவிருந்த கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் டிச.19,20இல் நடைபெறும் என அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

டிச.04 - 07.12 PM:  தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கும் புரெவி புயல், மேலும் வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு தென்மேற்காக நகர்ந்து, தெற்கு கேரளாவை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 24 மணிநேரத்தில் அதிகப்பட்சமாக கொள்ளிடத்தில் 36 செ.மீ மழையும், சிதம்பரத்தில் 34 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

11 மாவட்டங்களில் அதீத மழையும், 20 இடங்களில் மிக கனமழையும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 48 மணிநேரத்தில், கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும், திருவள்ளூர் போன்ற வட மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு நாளைவரை மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை வடகிழக்கு பருவமழை 2% குறைவாகவே பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

டிச.04 - 06.45 PM: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு  அதிகரிக்கப்பட்டுள்ளதால், குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேய்ச்சலுக்காக சென்ற எருதுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பின் உரிமையாளரின் முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளது.

டிச.04 - 06.40 PM: தஞ்சையில் 10 கிராமங்களுக்கு வழித்தடமாக உள்ள தரைப்பாலத்தின்மீது வெள்ளம் அதிவேகமாகச் செல்வதால் இந்த பாலத்தின்மீது பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலைத் துறையால் பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. 

டிச.04 - 06.30 PM:  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரே நாளில் 34 செ.மீ மழை பெய்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடந்த 2005, 2015களில் பெருவெள்ளம் ஏற்பட்டபோதுகூட இந்த அளவு தண்ணீர் சூழவில்லை. தற்போது வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால், தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. கடலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான நீர்நிலைகள், ஆறுகள் நிரம்பியுள்ளன.  

டிச.04 - 06.10 PM: புரெவி புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருவதால் உடுமலை வனச்சரகத்தில் உள்ள குறுமலை,குழிப்பட்டி, மாவடக்குப் போன்ற பகுதிகளில் இருந்து திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கோவில்நடை மூடப்பட்டு, இந்து அறநிலையத் துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினரால் இந்தப் பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது.  

டிச.04 - 05.56 PM: சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கியமுதலே இந்தப் பகுதியில் மழைத்தண்ணீர் தேங்கியுள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 3000க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இப்பகுதியில் பெரும்பாலும் தாழ்வான வீடுகளே இருப்பதால், மழைநீர் செல்லும்படி வடிகால் அமைத்துத் தரும்படி பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

டிச.04 - 05.45 PM:  சிதம்பரத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் கார் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை விட்டுவிட்டு பெய்தாலும்கூட வெள்ளநீர் வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் வெளியேறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

டிச.04 - 04.14 PM: விழுப்புரத்தில் விடிய விடிய மழை: குளமாக மாறிய வீடுகள்

டிச.04 - 03.53 PM:  செங்கல்பட்டு, கடுக்கலூர், கரும்பாக்கம், நல்லூர் உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிச.04 - 03.38 PM:  சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,800 கன அடியிலிருந்து 4,355 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,200 கன அடியாக உள்ளது. 

டிச.04 - 03.33 PM:  தொடர் கனமழையால் காஞ்சிபுரம் சித்தனக்காவூர் ஏரியில் மதகு அருகே கரை உடைந்து நீர் வீணாகிவருகிறது. மணல்மூட்டைகளைக் கொண்டு கரையை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.   

டிச.04 - 03.25 PM: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை செந்தலைவயல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடியிருப்புகளுக்குள் மட்டுமன்றி வயல்களிலும் மழைநீர் புகுந்ததால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

டிச.04 - 03.10 PM: ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியிலிருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியின் மொத்த அடியான 21 அடியில் நீர்மட்டம் 19.8 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது, ஏரியில் விநாடிக்கு 1,750 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் கூடுதலாக நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டிச.04 - 02.14 PM: செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 500 கன அடி நீர் அதிகரித்து மொத்தம் 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2900 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

டிச.04 - 01.15 PM: கடலூர் மாவட்டத்தில் கனமழை தொடரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் 35 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 47.50 அடி கொள்ளளவான வீராணம் ஏரி 46.50 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. இதை உடனடியாக வெளியேற்றும்பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். விநாடிக்கு 1221 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

டிச.04 - 01.00 PM: செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 500 கன அடி நீர் அதிகரித்து மொத்தம் 2500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

டிச.04 - 12.53 PM: கடந்த 24 மணிநேரத்தில் 11 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,  20 இடங்களில் மிக கனமழையும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

டிச.04 - 12.35 PM: கடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் கடலூரில் இருந்து சிதம்பரம், கும்பகோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

டிச.04 - 12.03 PM: மரக்காணம் அருகே குரும்பரம் காப்புக்காடு மற்றும் ஆலத்தூர் இணைப்பு ஓடை உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம்

டிச.04 - 11.51  AM: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் புதுச்சேரியில் நாளையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

டிச.04 - 11.45 AM: புழல் ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மே நீர் வருவதால் உபரிநீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிற்பகல் 3 மணிக்கு முதல்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர், அதிகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் மட்டம் 19 அடியை தாண்டியுள்ளது. ஏரி திறப்பால் வடகரை, வடபெரும்பாக்கம், நாரவாரி குப்பம், புழல், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிச.04 - 10.35AM: தொடர் கனமழை காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முழு விவரம் > தொடர் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில்! - புகைப்படத் தொகுப்பு 

டிசம்பர் 04 - 10.35AM: தமிழகத்தில் 8 இடங்களில் அதிகனமழை: கொள்ளிடம் - 36 செ.மீ சிதம்பரம் - 34 செ.மீ பரங்கிப்பேட்டை - 26 செ.மீ மணல்மேடு - 25 செ.மீ குறிஞ்சிப்பாடி - 25 செ.மீ திருத்துறைப்பூண்டி - 22 செ.மீ சீர்காழியில் 21 செ.மீ குடவாசல் - 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது

டிசம்பர் 04 - 9.15AM:ராமநாதபுரத்தின் அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை தொடர வாய்ப்பு

டிசம்பர் 04 - 8.45AM: சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர் திறப்பு 2000 கன அடியாக அதிகரிப்பு -குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

டிசம்பர் 04 - 8.40 AM: சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக வருவதால் உபரி நீரை வெளியேற்ற முடிவு; 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 19அடியை எட்டியுள்ளது

டிசம்பர் 04 - 8.35 AM:ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 34செமீ மழை கொட்டித் தீர்த்தது

டிசம்பர் 04 - 8.10 AM: சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைவால் நீர் திறப்பு 1000 கன அடியில் இருந்து 573 கன அடியாக குறைப்பு

சில தகவல்கள்:

  • புரெவி புயல் ஆழ்ந்த காற்றலுத்த மண்டலமாக மாறியப்போதும், தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.
  • புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 6 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
  • புரெவி புயல் வலுவிழந்தபோதிலும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
  • மழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • புயல் முன்னெச்சரிக்கையாக மதுரை விமான நிலையம் இன்று நண்பகல் 12 மணி வரை மூடப்படுகிறது. புரெவி புயல் வலுவிழந்தாலும் தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மதுரை விமான நிலையத்தில் நண்பகல் வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல, தூத்துக்குடி விமான நிலையமும் இன்று முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com