அதிமுக பொதுக்குழுவில் கே.பி. முனுசாமி- சி.வி. சண்முகம் வாக்குவாதம்: என்ன காரணம்?

அதிமுக பொதுக்குழுவில் கே.பி. முனுசாமி- சி.வி. சண்முகம் வாக்குவாதம்: என்ன காரணம்?
அதிமுக பொதுக்குழுவில் கே.பி. முனுசாமி- சி.வி. சண்முகம் வாக்குவாதம்: என்ன காரணம்?
Published on

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் வலுப்பெற்றதை அடுத்து, கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பு என இரு கோஷ்டிகள் உருவாகின. இருவரும் மாவட்டச் செயலாளர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவை திரட்டி வந்தனர். இதில் ஈபிஎஸ்-கே அதிக அளவில் ஆதரவு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒற்றைத் தலைமையாக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் தொடுத்த வழக்கில், புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் ஜூலை 11-ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் சட்டப்போராட்டங்களை மேற்கொண்டார். ஆனால் இந்த முறை அவருக்கு சட்டப்போராட்டம் கைகொடுக்கவில்லை. கட்சியின் உள் விவகாரங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் இம்முறை தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் 16 புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ரத்து செய்யவும், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 மாதங்கள் கழித்து அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு முறைப்படி தேர்தல் நடைபெறும் எனவும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.

கடும் வாக்குவாதம்

இந்தப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தொண்டர்களில் பெரும்பகுதியினர் கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, மேடையில் அமர்ந்திருந்த முக்கிய தலைவர்களும் இதுதொடர்பாக விவாதித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி - சி.வி. சண்முகம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓபிஎஸ்-ஐ உடனடியாக கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கே.பி. முனுசாமியிடம் சி.வி. சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அரை மணிநேரத்துக்கு பிறகு, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com