மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் ஜெனரேட்டர் பழுதடைந்தே உள்ளதால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே தலைமை அஞ்சலகம் இயங்கி வருகிறது. இந்த அஞ்சலகத்தின் கட்டுப்பாட்டில் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள குக்கிராமங்கள் வரையிலான நூற்றுக்கணக்கான கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது அஞ்சல்துறையில் அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் மின்சாரம் தடைப்பட்டால் அனைத்து வேலைகளும் தடைபட்டு நின்றுவிடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தலைமை அஞ்சலகத்தில் உள்ள ஜெனரேட்டர் பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் சரிசெய்யப்படாமல் இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகள் செய்வதற்காக அஞ்சலத்திற்கு வரும்போது மின்தடை ஏற்பட்டால் பரிவர்த்தனைகள் செய்வதற்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது எனக் கூறப்படுகிறது.
மின் தடை, ஜெனரேட்டர் பழுது என பணிகள் தேங்குவதால் அஞ்சலக ஊழியர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பழுதடைந்த ஜெனரேட்டரை உடனடியாக சீரமைத்து வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்க அஞ்சல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.