கந்து வட்டி புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் போத்ராவின் இரு மகன்களுக்கும் செப்டம்பர் 19ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்துவட்டி புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா, அவரது மகன்களான ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்ததையொட்டி, போத்ரா மீதும், அவரது மகன் ககன் போத்ரா மீதும் குண்டர் தடுப்புக்காவலின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போத்ராவை காவலில் எடுத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரிடம் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர். அதேபோல, சிந்தாதரிப்பேட்டையைச் சேர்ந்த நகை வியாபாரி பாக்சந்த் பண்டாரி அளித்த புகாரில், போத்ராவின் மகன்கள் ககன்போத்ரா மற்றும் சந்தீப் போத்ரா ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர். அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைவதையொட்டி, இருவரும் மீண்டும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் 19ம் தேதிவரை அவர்களது காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.