ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்புகளை, வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், “ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசு ஆபாச இணையதளங்களை தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. தொடர்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பதால் மாணவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்ற நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்க காட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஆன்லைன் வகுப்புகளை துவங்கும் முன் தமிழக அரசு எடுக்க தவறி விட்டது. கிராமங்களில் 44%, நகரங்களில் 65% மாணவர்களிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளது
இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அரசு பள்ளிகளுக்கு தொலைக்காட்சி பாடம் போல தனியார் பள்ளிகளுக்கு சாத்தியமில்லை. மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம். ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்புகளை, வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம்” என யோசனை தெரிவித்தனர். இதையடுத்து அரசு தரப்பு வாதத்திற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.