இன்னும் ஒரு மணி நேரம்தான்... பிற்பகல் 3 மணிக்கு தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் அமைந்துள்ள மாநாட்டு திடலில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்க, நேற்றிரவு முதலே தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் மாநாட்டு திடலில் குவிந்து வருகின்றனர். நேரம் ஆக ஆக எதிர்ப்பார்த்ததை விட அதிகளவில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பொதுமக்கள் அமர 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு இருந்த சூழலில், தற்போதுள்ள சூழலிலேயே, 1 லட்சத்தும் அதிகமானோர் மாநாடு நடைபெறும் இடத்தில் குவிந்துள்ளனர். இன்னும் பலர் வந்துகொண்டே உள்ளனர். மாநாடு நடக்கும் இடத்திலிருந்து சுமார் 10 கி.மீ-வரை வாகணங்கள் அணிவகுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக தண்ணீர் பற்றாக்குறை, உணவு வசதி, போக்குவரத்து என அனைத்திலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான தொண்டர்களின் வருகையால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவின் அளவை விட அதிகமான உணவுகள் தேவைப்படும் சூழலும் உண்டாகி இருக்கிறது. இந்த நிலையில், அங்குள்ள உணவகங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் அருகிலிருந்த தனியார் மண்டபம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவை தொண்டர்கள் இலவசமாக பெற்றுள்ளனர். மேலும், ஆங்காங்கே உணவுகள் இலவசமாக தரப்பட்டும் வருகிறது.
இதற்கிடையே ‘தண்ணீர் வேண்டும்’ என மாநாட்டு திடலில் பலர் பாட்டில்களை உயர்த்தி குரல் கொடுத்தனர். தண்ணீர் பற்றாக்குறை, கடும் வெயிலின் காரணமாக, பலர் மயங்கி விழுவதும் நடக்கிறது. இதனால் ஆங்காங்கே பரபரப்பு நிலவுகிறது. மயங்கி விழுவோருக்கு, முதலுதவியும் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், “மாநாட்டு திடலில் இரு புறங்களிலும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்கள் உடனடியாக வழங்கப்படும்” என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். காவல்துறையினரும் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க பல உதவிகளை செய்து வருகிறார்கள்.
இப்படியாக பல இன்னல்களை கடந்து மாநாட்டு திடலில் விஜய்யை காண ஆர்வமாக வரும் மக்கள், “திடல் அருகே ஏதாவது கடையிருக்கும்; சாப்பிடலாம்” என்று நினைக்க, தவெக மாநாடு நடைபெறும் பகுதிக்கு அருகிலுள்ள ஓட்டல்களை மூட போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
தண்ணீர், உணவுக்கு அப்பாற்பட்டு, விக்கிரவாண்டி சாலையில், ஏராளமானோர் குவிந்து வருவதால், 10 கி.மீ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசை கட்டு நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாற்று பாதையில் இயக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன்காரணமாக, விக்கிரவாண்டியில் இருந்து திண்டிவனத்தை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே “புதுச்சேரி அல்லது விழுப்புரத்திற்கு சென்று தவெக தலைவர் விஜய் தங்குவார்” என்றுக்கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் கேரவனிலேயே விஜய் தங்கி வருகிறார். தற்போது, தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் 2 ஆவது நாளாக விஜய் முகாமிட்டு அனைத்தையும் மேற்பார்வை இட்டு வருகிறார். மாநாட்டுக்கு வரும் மக்கள் அதிகளவு சிரமங்களை சந்தித்து வருவதால், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாலை 3 மணிக்கு விஜய்யின் மாநாடு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மாநாடு திடலுக்கு உள்ளே கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க 48 அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. உள்ளே இடம் இல்லாவிட்டால் பொதுமக்கள் மாநாடு திடலுக்கு வெளியே நின்று பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாநாடு திடலுக்கு உள்ளே தேவையான குடிநீர் வழங்க ஒவ்வொரு அரங்கிலும் 2 தண்ணீர் டேங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லாமல் மாநாட்டு திடலை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஆங்காங்கே குடிநீர் டேங்க்குகள் வைக்கப்பட்டுள்ளன.
கடும் வெயிலால் நீர்ச்சத்து குறைந்தால் குளுக்கோஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெயில் அதிகமாக உள்ளதால் மக்கள் தொப்பி அல்லது குடை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை குடை, தொப்பி எடுத்து வராவிட்டால் கட்சி சார்பில் இலவசமாக இவை இரண்டும் நேற்று இரவு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
காவல் துறை கட்டுப்பாடு காரணமாக மாநாட்டு திடலுக்குள் உணவளிக்க தடை உள்ளது. எனவே வருபவர்கள் வெளியே உணவருந்தி விட்டோ அல்லது உணவு பார்சலையோ எடுத்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக, கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் வருகை தர வேண்டாம், மது அருந்துவதற்கு தடை என பல அறிவுறுத்தல்களை கிட்டதட்ட 2 முறைக்கும் மேல் அறிக்கை வாயிலாக தொடர்ந்து தெரிவித்து வந்தது தவெக.
ஆனால், விஜய்யின் பேச்சை மீறி மாநாட்டு வருகை தந்தவர்களில் சிலர், குழந்தைகளை அழைத்து வந்தும், தடுப்புகளை உடைத்தும், மது அருந்தியும் வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் வர வேண்டாம் என்றுகூறியதை மீறி பயணித்து... அதனால் ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காகத்தான் பொறுப்புடனும், கடமை, கட்டுப்பாட்டுடனும் நடக்க வேண்டும் என்று விஜய் தொடர்ந்து பல அறிவுத்தல்களை முன்னதாக தொண்டர்களுக்கு கூறிக்கொண்டே வந்தார். இருப்பினும் சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
அதேநேரம் எதிர்ப்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகி வருவதால், மாலையில் இன்னும் பதற்றமான சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.