ஊரடங்கு நடவடிக்கையால் மக்கள் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் பல விலங்குகள் சாலையோரங்களில் தஞ்சம் புகுந்துள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறன. மக்களும் வீட்டில் இருந்து சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். இதனால் காற்றின் தரம் உயர்ந்திருப்பது மட்டுமல்லாமல், இயற்கையும் தன்னை புதுப்பித்து கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
வாகனப் புகை, தொழிற்சாலை புகை உள்ளிட்ட காற்று மாசு குறைந்துள்ளதால், பல இடங்களில் மரங்கள் புன்னகை பூக்க ஆரம்பித்திருக்கின்றன. மரங்களின் வரிசையில் பல மிருகங்களும் இணைந்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில், மனித நடமாட்டம் இல்லாததால் பல இடங்களில் வன விலங்குகள் சுதந்திரமாக வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக சில அரிய வகை உயிரினங்களும் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ள விலங்கான புனுகு பூனை ஒன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுதந்திரமாக வலம்வந்துள்ளது. சுமார் 250 புனுகு பூனைகள் மட்டுமே உயிரோடு இருப்பதாக கூறப்படும் நிலையில், 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதை பார்த்துள்ளதாக வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில், சில மான்கள் சாலைகளில் உற்சாகமாக உலா வந்தன. இதேபோல சண்டீகரில் சாலையில் மான் ஒன்று சர்வசாதரணமாக கடந்து சென்றிருக்கிறது.
திருப்பதியில் புள்ளிமான் கூட்டம் ஒன்று சாலையில் எந்த பயமின்றி மகிழ்ச்சியாக வலம் வந்தன. டேராடூனி்ல் குடியிருப்பு பகுதி ஒன்றில் மான் ஒன்று துள்ளி குதித்து ஓடியது. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில், காட்டெருமை ஒன்று சர்வ சாதாரணமாக நகர்வலம் வந்தது. எல்லாவற்றும் மேலாக ஓடிசா கடற்கரையில் 8 லட்சம் ஆலிவ் வகை ஆமைகள் சுமார் 6 கோடி முட்டைகளை இட்டு குஞ்சு பொறித்துள்ளன. தொழில் வளர்ச்சி, நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் காடுகள் அழிக்கப்பட்டு, விலங்குகள் பல தங்களது வாழ்விடங்களை இழந்துவிட்டன. தற்போது மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், அவை தற்போது தங்களது வாழ்விடங்களை தேடி வந்துள்ளன.