செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
கடலூர் மாவட்டம் வடலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (24.7.24) மாணவர்களுக்கு ஈட்டி எறியும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக 10-ம் வகுப்பு படிக்கும் கிஷோர் (15) என்ற மாணவரின் தலையில் ஈட்டி பாய்ந்துள்ளது. இதில், படுகாயமடைந்த மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெற்றெடுத்த மகனின் நிலையை கண்ட தாய் சிவகாமி, துக்கம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நெய்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவகாமி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிவகாமி, தற்போது மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வடலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.