ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பொறியாளர் ஒருவர், தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்வேல். மென் பொறியாளரான இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் மாதம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைனில் சூதாட்டம் விளையாடத் தொடங்கிய அருள்வேல், தொடக்கத்தில் சிறிய தொகையை கட்டி ரம்மி விளையாடியுள்ளார். ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைத்ததால், கையில் இருந்த பணம் முழுவதையும் செலுத்தி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்தார். முதலில் வெற்றி முகமாக இருந்த ஆன்லைன் சூதாட்டம், நாட்கள் செல்லச் செல்ல தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது.
பணம் முழுவதையும் இழக்கத் தொடங்கினார் அருள்வேல். சூதாட்டத்திற்கு அடிமையான அவர், திறமையாக விளையாடினால், இழந்த பணத்தை மீட்டு விடலாம் என நினைத்துள்ளார். அதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களிடம் சிறுக சிறுக கடன் வாங்கி, அதை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார்.
இறுதியில் பணம் அத்தனையும் இழந்த அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வந்த வேலையும் பறிபோனது. செய்வதறியாது திகைத்த அருள்வேல், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால், கடன் கொடுத்த நபர்கள் வீட்டிற்கு வந்து, பணத்தை திரும்பத் தர வேண்டுமென நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அருள்வேலையும், தாய் ராஜலட்சுமியையும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.
நிலைமை கையை மீறி சென்றதாக நினைத்த இவரும், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த விசாரணையில், ராஜலட்சுமி எழுதிய கடிதத்தின் மூலம் தற்கொலை தொடர்பாக விவரங்கள் தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைனில் உள்ள சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் கண்காணிப்பு மேற்கொண்டு, அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.