மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 2 ஆவது நாளாக இன்று நாள் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால் சாலைகள் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. சென்னை நகரமே மழைநீரில் தத்தளிக்கிறது. பல இடங்களிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.
போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த மிக்ஜாம் பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர்கொண்டு உதவிகள் செய்வோம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் தமிழகத்தில் இருந்து விலகி ஆந்திரா நோக்கிச் செல்கிறது. சென்னைக்கு வடகிழக்கே 100 கிமீ தொலைவிற்கு சென்றுள்ளது மிக்ஜாம் புயல். சென்னையில் இரவு படிப்படியாக மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் பலரும் சென்னைக்கு ஆதரவாகவும் சென்னை மக்களுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்ஷனா தனது எக்ஸ் தளத்தில், “எனது இரண்டாவது இல்லமான சென்னையில் இருந்து சில காட்சிகளைப் பார்த்தேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்புகிறேன். வலுவாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன் சமூக வலைதளத்தில், “இந்த மிக்ஜாம் புயல் பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக் காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது. சென்னை மக்களே உங்க சக்தியே, தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறதுதான். தைரியமா இருங்க” என தெரிவித்துள்ளார்.