நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அனுமதியின்றி செயல்படும் கிரஷரால், இயற்கை வளத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தளமாக விளங்கும் கொல்லிமலையில், சட்டவிரோதமாக பாறைகளை உடைத்து ஜல்லிக்கற்களாக மாற்றும் கிரஷர் செயல்பட்டு வருவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. வளப்பூர் நாடு பெரிய கோவிலூர், ஓலையாறு பகுதியில் நீர்மின் திட்ட பணிகளுக்காக அனுமதியின்றி பாறைகள் உடைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அடிவாரத்தில் இருந்தே கட்டுமானப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்ற விதிகளையும் மீறி, ஒப்பந்ததாரர் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
70 ஆயிரத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கும் கொல்லிமலையில் வனப் பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ளது. இங்கு மண் அள்ளவோ, பாறைகளை உடைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி, செயல்படும் கிரஷரால் கொல்லிமலையின் இயற்கை வளமே அழிந்துவிடும் என பழங்குடியின மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இது குறித்து விளக்கம் பெற பல முறை முயன்றும் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஜெயந்தி அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கொல்லிமலையில் ஜல்லி கிரஷர் அமைக்க அனுமதி வழங்கவில்லை என்றும், சட்டவிரோதமாக செயல்படும் கிரஷர் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் மாவட்ட மாசுக் கட்டுபாடு வாரிய பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.