ஊட்டச்சத்துடன் விளையாட்டையும் ஏழை, எளிய குழந்தைகளுக்கு வழங்க கொண்டு வந்தத் திட்டம்தான் அங்கன்வாடி திட்டம். ஆனால், மதுரை மாவட்டம், இடையபட்டி கிராமத்தில் அங்கன்வாடியில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு சூடு வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தனசேகர் என்பவரின் இரண்டரை வயது மகள், அங்கன்வாடியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது முழங்காலில் சூடு காயம் கொப்பளமாக மாறியுள்ளது. பிஞ்சு காலில் உள்ள கொப்பளத்தால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்ததில், அங்கன்வாடியில் பணிபுரியும் புஷ்பம் என்பவர் சூடு வைத்தாக அழுகையுடன் சொல்லத் தெரியாமல் குழந்தை கூறியுள்ளது.
குழந்தையின் பெற்றோர் இது தொடர்பாக கூறுகையில், “என் புள்ள கால்ல கரண்டிய வச்சு சுட்டு இருக்காங்க சார். எங்க புள்ளைங்களுக்கு இங்க எந்த பாதுகாப்பும் இல்ல. இதே மாதிரிதான் ஏற்கெனவே ஒரு புள்ளைக்கு உள்ளங்கால்ல சூடு வச்சாங்க. அப்போதும் இதேமாதிரிதான் பிரச்னை வந்தது. எந்த புள்ள அழகா இருக்கோ அந்த புள்ளைகளை மட்டும் தூக்குறது, பிள்ளைகள கால் அமுக்கி விட சொல்றாங்க” என வேதனையுடன் தெரிவித்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை காவல்துறையினரும் பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணை முடிந்து குற்றச்சாட்டு உண்மையானால், சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பணிக்குச் செல்லும் பெற்றோர், ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்புடன் ஊட்டச்சத்தும் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் அங்கன்வாடியை நாடி வருகின்றனர். அந்த நம்பிக்கையை சிதைக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.