கோயம்பேடு: பேருந்துக்காக பல மணிநேரம் காத்திருந்த மக்கள்; சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு

கோயம்பேடு: பேருந்துக்காக பல மணிநேரம் காத்திருந்த மக்கள்; சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு
கோயம்பேடு: பேருந்துக்காக பல மணிநேரம் காத்திருந்த மக்கள்; சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு
Published on

சென்னை கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பயணிகள் ஏராளமானோர் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்தனர். ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறி பயணம் செய்ததையும் காண முடிந்தது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதற்காக சென்னையில் 5 முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் பயணிகள் கூறினர். போதிய பேருந்துகள் இல்லாமல் விடிய விடிய காத்திருந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடப்படும் நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினரோடு கொண்டாடுவதற்காக நேற்று மாலை முதல் புறப்பட்டனர். போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருப்பதாக புகார் தெரிவித்தனர்.

பேருந்துகள் கிடைக்காததால் மாநகர பேருந்துகளை இயக்கி கூடுதலாக அனுப்பிவைக்கப்படும் நிலையில் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு முண்டியடித்து பேருந்தில் ஏறி இடம் பிடித்தனர். படிக்கட்டில் அமர்ந்து தொங்கிக் கொண்டும் நெரிசல் மிக்க பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் நேற்று முன்தினம் பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் நேற்று பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படாமல் குறைந்த அளவிலேயே காணப்பட்டதால் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை காத்து இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

திருச்சி மற்றும் விழுப்புரத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்த அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்கி இருந்தால் இவ்வளவு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றும், அதிகாரிகள் முறையான பதில் அளிக்காமல் பேருந்துகள் வரும் என அலைக்கழித்து வருவதாகவும் பேருந்துகளை இயக்கி தாங்கள் ஊருக்கு செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com