சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது. அப்படி தேங்கியுள்ள நீரில், பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையை முதலை ஒன்று கடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ், X தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "சென்னையில் நீர்நிலைகளில் சில மக்கர் ரக சதுப்புநில முதலைகள் உள்ளன; எனினும் இவைகள் மனிதர்களை விட்டு தள்ளியிருக்க விரும்பும் உயிரினமாகும்; வீடியோவில் காணப்படும் இந்த முதலை ஏதேனும் ஒரு நீர்நிலையிலிருந்து வெள்ளம் காரணமாக வெளியேறியிருக்கக்கூடும்
பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம்; வனத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பேசிய வன உயிரன காப்பாளர் பிரசாந்த், "பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அங்கு முதலை இருப்பது உறுதியாகியுள்ளது. வனத்துறை அதிகாரிகள், அங்கு சென்றுவிட்டனர். பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகே செல்ல வேண்டாம். நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்கிறது. கொஞ்சம் மழை நின்றவுடன், முதலை அங்கிருந்து மீட்கப்பட்டுவிடும். ஏற்கெனவே இப்படி மீட்டுள்ளோம். முதலைகளால் ஆபத்து ஏற்படாது" என்றார்.