குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
Published on

293 ஆவது ஆதினம் என தாக்கல் செய்த பதில்மனுவை நித்யானந்தா திரும்ப பெற வேண்டும்.இல்லையெனில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது
 
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ’மதுரை ஆதீனம் மடம் பழமையானது. இதன் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த 2012-ல் நித்யானந்தா, போலி ஆவணங்களின் அடிப்படையில் தன்னை 293-வது மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரது நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில், நித்யானந்தா ஆதீனமாக நியமனம் செய்ய தகுதியுடையவர் அல்ல என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நித்யானந்தா ஆதீனம் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து, நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி ஆதீன மடத்தையும், அதன் சொத்துக்களையும் கைப்பற்றும் எண்ணத்துடன் உயர் நீதிமன்ற கிளையில் ஆதீன மடத்துக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். மடத்துக்குள் நுழைவதற்கு நித்யானந்தாவுக்கு போலீஸ் அனுமதி வழங்கினால் தேவையில்லா சர்ச்சைகளும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். நித்யானந்தா, மதுரை ஆதீனம் மடத்தை அபகரிக்க முயல்கிறார். ஆதீனம் மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் அவருக்கு தடை விதிக்கவும், நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தை பாதுகாக்கவும், மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த அக்டோபர் 11ல் ஆதினம் மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் நித்யானந்தா தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில்," தான் மதுரை ஆதீனத்தின் 293ஆவது மடாதிபதி என்றும், 2012 ஏப்ரல் 27ல் இளைய ஆதினமாக நியமிக்கப்பட்டதாகவும், ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால் அவர் வாழ்க்கை முழுவதும் ஆதினமாகவே இருப்பார். அந்த நியமனத்தை ரத்து செய்ய முடியாது" எனவும் பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.  

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், 292ஆவது ஆதீனம் உயிரோடு இருக்கும் போது 293ஆவது ஆதீனம் என எப்படி குறிப்பிடலாம்? அவ்வாறு தாக்கல் செய்த பதில் மனுவை நித்யானந்தா திரும்ப பெறுவதற்கான மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். 

மேலும் அரசுத்தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவிலும், "292 ஆதீனம் உயிரோடு இருக்கும் போது  293 ஆவது ஆதினம் என குறிப்பிட இயலாது. மேலும் அவரை நியமனம் செய்த அருணகிரிநாதரே அந்த நியமனத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com