செய்தியாளர் - மா.ராஜாராம்
மயிலாடுதுறையில் விமேக்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட 1 அஸ்ட்ரோ டர்ப் விக்கெட் மற்றும் 2 கிரிக்கெட் பிராக்டிஸ் நெட் ஆகியவை திறக்கப்பட்டது. அஸ்ட்ரோ டர்ப் விக்கெட்டினை தமிழகத்தைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜனும், கிரிக்கெட் பிராக்டிஸ் நெட்டினை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனாவும் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், நடராஜனைப் பார்ப்பதற்காக எடுத்துக்கட்டி சாத்தனூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகள்களான, இரண்டரை வயது முதல் கிரிக்கெட்டில் ஆர்வமுடன், விளையாடி வரும் இரட்டை சகோதரிகள் சிவன்யா, சிவானி ஆகிய இருவரும் மேடைக்குச் சென்று கிரிக்கெட் வீரர் நடராஜனிடம் பரிசை கொடுத்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதில், ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள், மாணவர்கள் நடராஜனிடம் ஆட்டோகிராப் பெற்றனர். சில மாணவர்கள் கிரிக்கெட் பேட்டில் ஆட்டோகிராப் பெற்றனர். சிறுமி ஒருவர் தான் அணிந்திருந்த டீசர்ட்டில் முதுகில் நடராஜனின் கையெழுத்தைப் பெற்றார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக, விழாவில் பிராக்டிஸ் நெட்டினை துவங்கி வைத்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பேட்டிங் செய்து, நடராஜன் பந்து வீசி தொடங்கி வைத்தனர்.
விழாவில் பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன், “நிறைய ஊர்களில் குறிப்பிட்ட ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுத்து முன்னோக்கி செல்வதை அங்கீகரிகக்வே மாட்டார்கள். நானே அதை நிறைய அனுபவப்பட்டிருக்கிறேன். பிடித்த விஷயத்தை பண்ணினால்கூட, டிஸ்கரேஜ் செய்வார்கள். என்னை அன்று அப்படி பேசியவர்கள், இப்போது ‘அன்னைக்கே தெரியும், நீ நல்லா வருவ’ன்னு என பாராட்டுகிறார்கள். இதுதான் உலகம்.
ஆகவே எந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அதில் முன்னோக்கி சென்றுகொண்டே இருங்கள். நிச்சயம் வெற்றியை அடையலாம். இடையில் தடைகள் நிறைய இருக்கும். நானெல்லாம் செங்கல் எடுக்க, மணல் அள்ள, கட்டட வேலைக்கு கூட சென்றுள்ளேன். அதெல்லாம் தாண்டி, இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது கிடைக்கும் வெற்றி தரும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தையே இல்லை!
இந்தகாலத்தில் குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை பார்க்க முடிகிறது; அந்த நேரத்தை ஏதாவது விளையாட்டில் செலவிடுங்கள். மண்ணில் விளையாடுவது அவ்வளவு நல்லது. ஸ்போர்ட்ஸ் மட்டும்தான் முக்கியம் என நினைப்பவர்கள், கல்வியில் கோட்டை விட்டுவிடாதீர்கள்... அப்படி செய்தால் நிறைய விஷயங்களை இழந்துவிடுவீர்கள். நானே அதற்கும் அனுபவப்பட்டுள்ளேன். படிப்பு சரியாக இல்லாததால், பல இடங்களில் மொழிப்பிரச்னையை எதிர்கொண்டிருந்திருக்கிறேன். இதுதான் சரியான வயது... 20 வயதில் இலக்கைஐ நோக்கி ஓடினால்தான் 30 வயதில் சென்றடைய முடியும். இல்லையென்றால் 40 - 50 வயது வரை கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் நீங்கள். ஆகவே எதையும் விட்டுவிடாதீர்கள்” என்றார்.