தேனியில் அனுமதியின்றி ரூ.500 கோடிக்கு கிராவல் மண் எடுத்த விவகாரம்-நீதிமன்றம் புதிய உத்தரவு

தேனியில் அனுமதியின்றி ரூ.500 கோடிக்கு கிராவல் மண் எடுத்த விவகாரம்-நீதிமன்றம் புதிய உத்தரவு
தேனியில் அனுமதியின்றி ரூ.500 கோடிக்கு கிராவல் மண் எடுத்த விவகாரம்-நீதிமன்றம் புதிய உத்தரவு
Published on

அரசு நிலத்தில் கிராவல் மண் எடுக்க முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு உடந்தையாக இருந்த புகாரில் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிப்பது குறித்து, தமிழக தொழில் துறை கூடுதல் செயலர் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முறைகேடு நடந்துள்ளதாகவும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசு நிலங்களிலிருந்து கிராவல் மண் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் இருந்தால் கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, புகாரில் இரண்டு துறை அதிகாரிகளுக்கு இந்த குற்றத்தில் சம்பந்தம் உள்ளதாகவும், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிவிட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கனிம வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும், அதுதொடர்பாக கனிமவளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், அனுமதி வழங்கியவுடன் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கனிமவளத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் மனுவை, தமிழக தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதி தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com