சேலத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட பிரச்னையால் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர். இவர் தீபாவளி தினமான கடந்த ஞாயிறு இரவு வித்யா நகர் பகுதியில் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு சிலர் சாலையில் பட்டாசு வெடித்த போது, அபுபக்கர் உள்ளிட்டோர் மீது நெருப்பு பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு அடிதடி வரை சென்றதாக தெரிகிறது. அப்போது சிலர் உருட்டுக்கட்டையால் அபுபக்கரை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அம்மாபேட்டை பகுதியைச் சார்ந்த கௌதம், தீபக், கதிரேசன், பாலமணி, பிரகாஷ், பாலகுமார், மணிகண்டன் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கொலை நடந்ததா ? அல்லது அபுபக்கர் கொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.