விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஊழலை பற்றி பேசக்கூடிய தார்மீக உரிமை அண்ணாமலைக்கு இருக்கிறதா? ரஃபேல் கை கடிகார விவகாரத்தில் அந்த மாடல் கடிகாரம் ரூ.5 கோடி என்று ஏற்கனவே அண்ணாமலை தெரிவித்திருந்தார். தற்போது அதன் விலை ரூ.3 லட்சம் என்கிறார். 5 கோடி மதிப்புள்ள கடிகாரத்தை குறைந்த விலைக்கு வாங்குவது முறைகேடு இல்லையா?
தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் 2500 கோடி ஊழல் விவகாரத்தில் பாஜக மாநில நிர்வாகி ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லாத ஒரு மாநிலத்தில் 2 வருடங்களில் 2,500 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்பதை பாஜகவால் மறுக்க முடியுமா? குற்றவாளி கூண்டில் நிற்கும் பாஜகவுக்கு ஊழல் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை. ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று கூறிய அண்ணாமலை தற்போது சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது திமுக தலைவர்கள் சொத்துப் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளனர். அரசாங்க வலை தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொகுத்து சொத்து பட்டியல் கொடுக்க வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு என்ன இருக்கிறது. சொத்து மதிப்பை சொல்வதுதான் ஊழல் பட்டியலா? வெத்து புருடா விடுபவர் அண்ணாமலை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
பாஜக கபட நாடகம் நடத்தி தமிழ்நாட்டில் பதட்டமான சூழலை உருவாக்கி தேவையற்ற சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இவ்வாறு இருக்கக் கூடாது. சில தேர்தல்களில் தோல்வி அடைந்ததற்காக தேசிய கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது பொருத்தமற்றது. ஏற்புடையதல்ல. காலம் காலமாக தேசிய அங்கீகாரத்தில் இருந்த கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது பாஜகவின் திட்டமிட்ட முயற்சி. அரசியல் கட்சிகளை வாக்கின் சதவிகிதத்தில் மட்டுமே பார்ப்பது பொருத்தமானதல்ல என்றார்.