கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஜனவரி 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என CPIM மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் பேசியதன் விவரம் பின்வருமாறு:
“ஜக்கி வாசுதேவ் செல்வாக்கு மிக்கவர். ஆதி யோகி சிலை திறப்பில் பிரதமர் மோடி பங்கேற்றார். மதசார்பின்மை கொள்கையை பின்பற்றும் இந்தியாவில் இதுபோன்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்துக்கொள்ளக் கூடாது. பாஜக தேசிய தலைவர் நட்டா உட்பட ஒன்றிய அரசின் தலைவர்கள் ஈஷா மையத்துக்கு வந்து செல்கின்றனர்.
ஒன்றிய அரசின் ஆதரவில் செல்வாக்குமிக்க நிறுவனமாக உள்ளது. அதனால் சுபஸ்ரீ மரணம் மறைக்கப்படுவதாக மக்கள் சந்தேக்கின்றனர். காவல்துறை இந்த மரணத்தில் மென்மைபோக்கை கடைபிடிக்கப்படுகிறது, அமைதிக் காக்கிறது. ஜக்கி வாசுதேவை விசாரிக்க வேண்டும். ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஈஷா மைய செயல்பாடுகள், ஜக்கி வாசுதேவ் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
ஈஷா மையம் உடனடியாக மூடப்பட வேண்டும். வருகிற 6ம் தேதி CPI சார்பில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெறும். அதிகாரம் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற போக்கு ஆபாத்தானது. இதுதொடர்பாக பிற ஜனநாயக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் மௌனம் காக்கக்கூடாது.
ஜக்கி வாசுதேவின் ஈஷா மையம் பல செல்வாக்கு மிக்கவர்களின் பினாமியாக செயல்படுகிறது. பணத்தை பாதுகாக்கும் நிறுவனமாக செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தமிழக காவல்துறை தயக்கமில்லாமல், மெத்தனத்தை கடைபிடிக்காமல், சுபஸ்ரீ மரண விவகாரத்தை கையாள வேண்டும். யோகா மையத்தில் காவல்துறை சரியாக விசாரணை நடத்தவில்லை. சாதாரண கட்டமைப்பில் நடைபெறும் சம்பவங்கள் எவ்வாறு விசாரிக்கப்படுமோ அதுபோன்று சுபஸ்ரீ விவகாரத்திலும் விசாரிக்க வேண்டும்.
டிசம்பர் 24ம் தேதி சுபஸ்ரீ கணவர் பழனிக்குமாரை அழைத்து பேசியது, விடுமுறை நாளில் அவசரமாக பிரேத பரிசோதனை செய்தது தொடர்பாக காவல்துறை விசாரித்தார்களா? சட்டமன்றத்தில் ஈஷா யோக மையம் தொடர்பாக வாதம் எழுப்பப்பட்டும். ஜக்கி வாசுதேவும் இந்திய நாட்டின் மக்களில் ஒருவர் தான்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை ஈஷா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நித்யானந்தாவை அடி அடி என அடிக்கும் ஊடகங்கள் ஈஷா பற்றியும் பேச வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற ஊடகம் சரியாக செயல்பட வேண்டும். ஊடகம் சரிந்து போனால் ஜனநாயகமும் சரிந்து விடும்.” இவ்வாறு முத்தரசன் பேசியிருக்கிறார்.