நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில், சிபிசிஎல்-ன் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு பழுது நீக்கம் செய்யப்பட்டதாக சிபிசிஎல் அதிகாரிகள் பேட்டியளித்துள்ளனர்.
நாகையை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில், கடந்த இரண்டாம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மீனவ கிராம மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடற்கரையில் இரவு பகலாக மீனவ கிராமத்தினர் குவிந்திருந்தனர். இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குழாயில் உடைப்பை அடைக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்த ஊழியர்கள், இன்று அதிகாலை குழாயினை அடைத்ததாக தெரிவித்தனர்.
ஆனால் காலை 6 மணி அளவில் மீண்டும் கசிவு ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்த நிலையில், இன்று மாலை வரை பழுது நீக்க பணியில் ஈடுபட்ட அவர்கள் தற்போது பழுது நீக்கம் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிபிசிஎல் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்கரை பக்கவாட்டில் குட்டைவெட்டி தேக்கி வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய், நவீன வாகனம் மூலம் உறிஞ்சப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் “சிபிசிஎல் குழாய் நிரந்தரமாக இப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என மீனவ கிராமத்தினர் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து சிபிஎஸ்இஎல் அதிகாரியிடம் கேட்டபோது, “சுத்திகரிப்பு திட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஓஎன்ஜிசியின் உற்பத்தியை தடுக்க முடியாத காரணத்தால், குழாய் வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்பட்டு காரைக்கால் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்படுகிறது. இந்தத் திட்டம் 3 வருட காலம் உள்ளது. அதனால் திட்டம் முடிந்தவுடன் முழுமையாக இந்த குழாயினை எடுத்து விடுவோம்” என கூறினார்.