தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து 3ஆவது நாளாக குறைந்து 33,059 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 16,64.350 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 1,296 சிறார்கள் ஒரே நாளில் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 21,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14,03,52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவு அதிகரித்து 364 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து 4-ஆவது நாளாக 300க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியிருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 18,369 ஆக அதிகரித்துள்ளது. இணை நோய் இல்லாத 91 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,42,929 ஆக உயர்ந்துள்ளது.
74 ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொரோனா:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிஹார் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை - கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிஹார் சிறார் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை நிர்வாகம் மறைப்பதாக புதிய தலைமுறை அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து செய்தியாளர் குழு களத்தில் இறங்கியது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள அந்த இல்லத்தில் மன வளர்ச்சி குன்றிய 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் உட்பட மொத்தம் 174 பேர் தங்கியுள்ளனர்.
கடந்த 16 ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் இருந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 74 பேருக்கு "பாசிடிவ்" என்று ரிசல்ட் வந்துள்ளது. பாலவிஹார் இல்ல வளாகத்தில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் கீழ் சிறப்பு ஆசிரியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புக்கு வெளியில் இருந்து ஆசிரியர்கள் வந்து சென்ற நிலையில், அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதை மறைக்கவே குழந்தைகளுக்கு ஏற்பட்ட தொற்றை நிர்வாகம் மூடி மறைக்க முயன்றுள்ளது.
இதுகுறித்து பாலவிஹார் இல்ல நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தபோது அவர்கள் தரப்பில் யாரும் பேச மறுத்துவிட்டனர். இதுபோன்ற சிறார் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் குழந்தைகள் உரிமையியல் செயற்பாட்டாளர்கள்.
புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளை தினமும் சுழற்சிமுறையில் மருத்துவர்கள் பரிசோதிக்கவும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. தொற்று இல்லாத குழந்தைகளை பாதுகாப்பான அறைகளில் தங்க வைத்து இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.