கோவை விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக குற்றம்சாட்டப்பட்ட விடுதி உரிமையாளர் மர்ம மரணம் அடைந்துள்ளார்.
கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருந்த பெண்களை பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில், விடுதிக் காப்பாளராக பணிபுரியும் பெண் மது அருந்த கட்டாயப்படுத்தியுள்ளார். அத்துடன் அந்த மாணவிகளை தவறாக பயன்படுத்த முயன்றுள்ளார். பின்னர் அலங்கோலமாக இருந்த விடுதி உரிமையாளரிடம் வீடியோ கால் பேச வைக்கவும் விடுதி காப்பாளர் புனிதா முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இருவர் மீதும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் காப்பாளர் புனிதாவை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தனது வழக்கறிஞர் மூலமாக நெல்லை நீதிமன்றத்தில் சரணடைய ஜெகநாதன் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக நெல்லை சென்ற அவர், ஆலங்குளம் அருகே உள்ள தோட்ட வீடு ஒன்றில் நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார். அவருடன் விடுதிக் காப்பாளர் புனிதாவும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுடன் சேர்ந்து ஜெகநாதன் மது அருந்தியதாக தெரிகிறது. மது அருந்திய இடத்திலிருந்து, தூங்கும் இடத்திற்கு செல்லும் வழியில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணறு ஒன்று இருக்கிறது. இந்நிலையில் அந்தக் கிணற்றில் ஜெகநாதன் உடல் மிதந்துள்ளது.
அவர் எப்படி இறந்தார் ? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜராவதை நினைத்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மதுபோதையில் தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர். மேலும் அவரை யாரேனும் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.