கோவையில் வெள்ளப்பெருக்கால் காந்தையாற்று பாலம் மூழ்கியதால், மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து பள்ளி செல்கின்றனர்.
பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் காந்தையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காந்தையாற்று பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஆற்றின் மறுகரையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நகர்ப்பகுதிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரிசல் மூலம் ஆபத்தான காட்டாற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.
ஆற்றைக் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும், வேறு வழியின்றி மாணவர்களின் பரிசல் பயணம் தொடர்கிறது. ஆற்றில் நீர் வடிந்த பிறகு பாலத்தை உயர்த்திக் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நீரில் மூழ்கிய பாலத்தை ஆய்வு செய்த கோவை சார் ஆட்சியர் கார்மேகம், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.