கோவையை சேர்ந்த 6 வயது சிறுமி கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் உண்டியல் பணம் 12,404 ரூபாய் மற்றும் பொம்மைகளை அனுப்பி வைத்துள்ளார்.
கோவை கவுண்டர்மில் பகுதியை சேர்ந்த சிவகுமார் மற்றும் மீத்தா தம்பதியரின் ஆறு வயது மகள் தமிழினி. சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை பழகும் விதமாக சிறுமியின் பெற்றோர் அவருக்கு ஒரு உண்டியல் வாங்கி கொடுத்துள்ளனர். அவ்வப்போது பண்டிகை பிறந்தநாள் விழாக்களின் போது பணம் வழங்கி வந்துள்ளனர். அந்த பணத்தை பெறும் தமிழினி, அவற்றை தான் வைத்திருக்கும் உண்டியில் இட்டு சேமித்து வந்துள்ளால். இந்த நிலையில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் நிலையை தொலைக்காட்சிகளில் பார்த்த அச்சிறுமி, தனது தந்தையிடம் சென்று தனது உண்டியல் பணத்தை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தான் விளையாடி மகிழும் பொம்மைகளையும் விற்று அதில் வரும் பணத்தையும் எடுத்து நிவாரணமாக வழங்குமாறு வேண்டியதுடன், அனைத்து தரப்பு மக்களும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து உண்டியலை பிரித்து கணக்கிட்ட அவளது பெற்றோர் அதில் 12,404 ரூபாய் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.
அப்பணத்தை நிவாரணமாக வழங்குவதாகவும், தமிழினி விளையாடிய 20க்கும் மேற்பட்ட பொம்மைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குழந்தைகள் விளையாட அனுப்பி வைப்பதாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். தினந்தோறும் அரசியல் கட்சியினர் தன்னார்வ அமைப்பினர் லட்சக்கணக்கில் நிவாரண பொருட்களை அனுப்பி வரும் நிலையில், இச்சிறுமியின் நிவாரண உதவி பல கோடி மதிப்புடையது என்பது மட்டும் உண்மை.