கோவில்களின் தினசரி நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஸ்ரீவாரி என்ற பக்தர் தொடர்ந்த மனுவில், ‘திருப்பதி வெங்கடாஜலபதிக்கு செய்யப்படும் பூஜைகள் மற்றும் சடங்குகளில் விதிமுறை மீறல்கள் நடைபெறுகிறது. அதனை விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “கோவில்கள் என்னமாதிரியான வழிபாடுகளை செய்ய வேண்டும், அதில் எத்தனை பேர் ஈடுபடவேண்டும் போன்றவற்றையெல்லாம் நீதிமன்றத்தால் கூற முடியாது. எனினும் மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக விவரங்களை அறிய விரும்புகிறோம். எனவே இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, “இந்த வழக்கு சட்டபூர்வமாக விசாரணைக்கு உரியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் திருப்பதி ஏழுமலையானுக்கு சரியான பாரம்பரிய முறைகளை கடைப்பிடித்து பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்பதுதான் நீதிபதிகளாக எங்களது விருப்பமும் கூட” எனக் கூறினார். பின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “கோவில்களில் தினசரி பூஜை விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அதே நேரத்தில் மனுதாரருக்கு இந்த விவகாரத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இது தொடர்பாக கோவில் நிர்வாகம் 8 வாரத்திற்குள் அவரிடம் விளக்கங்களை அளிக்க வேண்டும். அதிலும் மனுதாரருக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அமைப்புகளை அவர் நாடலாம்” என தலைமை நீதிபதி கூறினார்.
முன்னதாக, “இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என மனுதாரர் உச்ச நீதிமன்ற பதிவாளரை மிரட்டியதாக தெரிகிறது. ‘திருப்பதி ஏழுமலையானின் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்’ என அதற்கு தலைமை நீதிபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நிரஞ்சன் குமார்