கோவை அவினாசி சாலை மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை!

கோவை அவினாசி சாலை மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை!
கோவை அவினாசி சாலை மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை!
Published on

கோவையில் அவினாசி சாலை மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கோவை, அவினாசி சாலையில், கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை எதிர்த்து, அந்த சாலையில் நிலம் வைத்துள்ள சசி அட்வர்டைசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்.சுவாமிநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த அவினாசி சாலையில், நெடுஞ்சாலை சட்டத்தின் எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை, கையகப்படுத்துவது தொடர்பாக எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்றும், அனுமதி இல்லாமல் தங்கள் இடத்தை மேம்பால கட்டுமான நிறுவனமான கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் பயன்படுத்துவதை ஆக்கிரமிப்பாகத்தான் கருத வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்பதால், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, மேம்பால கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அறிவிப்பாணையை ரத்து செய்யவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். சத்யநாராயணன் மற்றும் ஏ.ஏ. நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நெடுஞ்சாலை சட்ட விதிகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள அவினாசி மேம்பால கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, திட்டத்தின் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர், மேம்பால கட்டுமானம் மேற்கொள்ளும் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com