தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துப்பாக்கிச்சூடுக்கு காரணமானவர்கள் எனக் கூறி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், பார்த்திபன், வட்டாட்சியர்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர் மீது, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வலியுறுத்தி அர்ச்சுனன் என்பவர் சிபிஐக்கு புகார் மனு அனுப்பினார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் திருமலை மீது மட்டும் குற்றம்சாட்டி சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் சிபிஐ-ன் நடவடிக்கை சட்ட விதிகளுக்கு எதிரானது எனவும், சிபிஐ-ன் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகையா, காவல் ஆய்வாளர் மட்டுமே குற்றவாளி என சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்தார். இந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை செய்து, 6 மாதங்களுக்குள் புதிய அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்