ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகள்: 7 வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்குகளில் ஏழை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், 3 மாதங்களில் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
H.Raja
H.Rajapt desk
Published on

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா, கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக, வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Kanimozhi MP
Kanimozhi MPpt desk

இதே போல் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இப்படி இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

தனது மனுவில் ஹெச்.ராஜா தரப்பில் “அறநிலையத்துறை அதிகாரிகளின் புகார்கள் அனைத்தும் செவிவழிச் செய்திதான், ஆதாரம் ஏதும் இல்லை. பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென்று ட்விட்டரில் பதிவிட்டதற்கு ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் “எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து. அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என ஹெச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

Court order
Court orderpt desk

இதையடுத்து “ஹெச்.ராஜாவின் பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும்” என்றும் சுட்டிக்காட்டிய காவல்துறை, வழக்குகளை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

H.Raja
“ஹெச்.ராஜா இதுபோன்று பேசுவது முதன்முறையல்ல; இதை ஏற்றுக்கொள்ள முடியாது”- சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அறநிலையத் துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக, சிவகாஞ்சி, கரூர், ஊட்டி, திருவாரூர் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முதல் தகவல் அறிக்கை கட்டத்திலேயே இருப்பதாக கூறி, அந்த 4 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

h raja
h rajapt web

அதேசமயம் இவ்விஷயத்தில் விருதுநகர், இருக்கன்குடி, ஈரோடு ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுவிட்டதை கூறி, இந்த 3 வழக்குகளை ரத்து செய்ய மறுத்து ஹெச்.ராஜாவின் கோரிக்கை மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் ஈரோடு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, ரத்து செய்யப்படாதவற்றை 3 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு காவல் நிலையத்தில் பதிவாகி, அங்குள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, அந்த வழக்குகளை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், அதிலும் 3 மாதங்களில் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் கனிமொழி குறித்து விமர்சித்தது தொடர்பாக ஈரோட்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், அதையும் 3 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com