பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களுடன் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக திருநாவுக்கரசின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். தற்போது அவரது உறவினர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதில் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளபட்டது. பின்னர் அங்கிருந்து செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், திருநாவுக்கரசுவை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோரிக்கை மனு அளித்தது. இதையடுத்து இன்று திருநாவுகரசுவை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக, நேரடியாக ஆஜர்படுத்தும் நேரத்தில் திருநாவுக்கரசை தாக்க மகளிர் அமைப்புகள், வழக்கறிஞர்கள் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து கோவை சிறையில் உள்ள திருநாவுக்கரசுவை காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருநாவுக்கரசை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில் சிரமம் இருந்ததால் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தியதாக நீதிபதியிடம் கோவை போலீசார் தெரிவித்தனர்.
40 நிமிடங்கள் திருநாவுக்கரசுவிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. பின்னர், சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து திருநாவுக்கரசுவை ஏன் காணொலி காட்சி மூலம் விசாரணை செய்கிறீர்கள் என வழக்கறிஞர் நீதிபதியிடம் முறையிட்டனர். இதற்கு பதிலளித்த அவர், திருநாவுக்கரசு தாக்கப்படலாம் என உளவுத்துறையில் இருந்து தகவல் வந்ததால் அவரை காணொலி காட்சி மூலம் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது எனவும் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் திருநாவுக்கரசுவிடம் மனித உரிமை மீறல் கூடாது எனவும் அவருக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.