விதிகளை மீறி விலங்குகள் கொண்டுவரப்படவில்லை என்பதை உறுதி செய்க -அரசுக்கு கோர்ட் உத்தரவு

விதிகளை மீறி விலங்குகள் கொண்டுவரப்படவில்லை என்பதை உறுதி செய்க -அரசுக்கு கோர்ட் உத்தரவு
விதிகளை மீறி விலங்குகள் கொண்டுவரப்படவில்லை என்பதை உறுதி செய்க -அரசுக்கு கோர்ட் உத்தரவு
Published on

மிருகவதை தடை சட்ட விதிகளை மீறி, பசுக்கள், ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளை கொண்டு வரவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் மிருகவதை தடைச் சட்ட விதிகளை பின்பற்றாமல், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளை கொண்டு செல்ல தடை விதிக்கக்கோரி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஒவ்வொரு லாரிகளிலும் அதிகபட்சமாக 5 முதல் 6 விலங்குகளை மட்டுமே ஏற்ற வேண்டும். ஆனால் அதிக எண்ணிக்கையில் பசுக்கள் இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கால்நடைத்துறை இணைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சட்ட விதிகளை அமல்படுத்தும் அதிகாரம் கால்நடைத் துறைக்கு இல்லை எனவும், மிருகவதைச் சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிதிகளை அமல்படுத்தும்படி டிஜிபி, போக்குவரத்து ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, மிருகவதைச் சட்ட விதிகளை மீறி, பசுக்கள், ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளை கொண்டு வரப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். பிற மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக விலங்குகள் கொண்டு வரப்படுவதை கண்காணிக்க, இருமாநில எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பயன்படுத்தி, விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், இறைச்சிக்காக விலங்குகள் பலியிட ஒதுக்கப்பட்ட ஆட்டுத் தொட்டிகளில் மட்டுமே விலங்குகள் பலியிடப்பட வேண்டும் எனவும், திறந்த வெளிகளில் விலங்குகளை வெட்டக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மிருகவதைச் சட்ட விதிகளை மீறி தமிழகத்துக்குள் எந்த விலங்கும் கொண்டுவர அனுமதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com