மத, இன கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக்கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு எதிரான புகாரில், வழக்குப்பதிவு செய்ய வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜெய்பீம் படம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தேச ஒற்றுமையை சீர்குலைக்கவும், இந்து வன்னியர் சமூக மக்களை புண்படுத்தியும் ஜெய்பீம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அகரம் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்து, அதைக்கொண்டு ஜெய்பீம் படத்தை எடுத்துள்ளதாகவும், அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பதாகவும் அவர் புகார் அளித்திருந்தார்.
இதனால் ஜெய்பீம் படத் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், கலை இயக்குநர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சந்தோஷ் நாயகர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார் மீது ஐந்து நாட்களில் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை மே 20ஆம் தேதி தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.