சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு, சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அத்துடன் புதிதாக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களும் நீதிபதி அல்லி முன்பு விசாரிக்கப்பட்டன.
அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, காலதாமதத்தை ஏற்படுத்தவே செந்தில் பாலாஜி தரப்பு கூடுதல் மனுக்களை தாக்கல் செய்வதாக வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஜூலை 22 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.