சிறைகளில் தண்டனை கைதிகள் வேலை செய்ததற்கான சம்பளத்தில் பிடிக்கப்பட்ட நிவாரண நிதியை பாதிக்கப்பட்டோருக்கு முறையாக வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு. மனுதாரரின் கோரிக்கை குறித்து சிறை நிர்வாகம் உரிய முடிவு எடுக்க வேண்டும். என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை, சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்: தமிழக சிறைகளில் உள்ள தண்டனை கைதிகள் சிறையில் செய்யும் வேலைக்காக வழங்கப்படும் ஊதியத்தில் 20 சதவீதம் பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு பிடித்தம் செய்யும் பணம் முறையே பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதில்லை எனவும், இதனால் அவர்களது மறுவாழ்வு பணி பாதிப்பதோடு, நிலுவையிலுள்ள பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதியை உடனடியாக வழங்கவும், உரிய நேரத்தில் பணம் வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும், இதற்கான பணிகளை மேற்கொள்ள உரிய காலக்கெடுவை நிர்ணயிக்கவும், நிதியை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரர் கோரிக்கை குறித்து சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து ஏப்.5ல் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.