18 ஆவது மக்களவை தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள சூழலில் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், சின்னம் தொடர்பாக கோரிக்கைகள் பல கட்சிகளில் இருந்தும் எழுந்த வண்ணம் உள்ளன.
உதாரணத்துக்கு நாம் தமிழர் கட்சி தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் தேவை என தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதாடி வருகிறது. இதேபோல 1996 ஆம் ஆண்டு முதலே சட்டமன்றம், உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட மதிமுக, இம்முறையும் பம்பரம் சின்னம் கேட்டு வருகிறது.
தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் வராததை அடுத்து, தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று மதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
‘இரண்டு வாரங்களுக்குள் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, ‘தேர்தல் நாள் நெருங்குகின்ற சூழலில், தேர்தல் ஆணையம் இன்னமும் எங்கள் கோரிக்கை மனு மீது எந்த முடிவும் எடுக்கவில்லை’ என மதிமுக சார்பில் நேற்று நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கானது இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் இது குறித்து தெரிவிக்கையில், “சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால்தான் அக்கட்சிக்கு ஒரே சின்னத்தினை வழங்கமுடியும். 14 ஆண்டுகளுக்கு முன்பே மதிமுகவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்வார். இருப்பினும், மதிமுகவின் கோரிக்கை குறித்து இன்றே பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்” என்று உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், மதிமுக தரப்பில் தெரிவிக்கையில், “ஏற்கெனவே அந்த சின்னத்தில் போட்டியிட்டுள்ளதால் முன்னுரிமையின் அடிப்படையில் அதனை எங்களுக்கு வழங்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பம்பரம் சின்னம் பொதுப்பட்டியலில் உள்ளதா? என தேர்தல் ஆணையம் இன்று மதியம் தெரிவிக்கவேண்டும் எனக்கூறி இவ்வழக்கினை மதியம் 2 .15 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிலை ஒட்டிதான் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? இல்லை வேறு சின்னத்தில் மதிமுக போட்டியிடுமா என்பது தெரியவரும்.