செய்தியாளர்: வி.பி.கண்ணன்
சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சவுக்கு சங்கர் நடத்தும் யூ-டியூப் சேனலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், கரூரில் பிரியாணி கடை நடத்தும் கிருஷ்ணன் என்பவருக்கும் ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட இருவரும் பேசியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 01.10.2023-ல் ஈரோடு சென்ற விக்னேஷ், கரூரில் உள்ள கிருஷ்ணனை தொடர்பு கொண்டு, தான் ஈரோட்டில் இருப்பதாகவும், 16.10.2023 தேதி கரூர் வருவதாகம் ஆன்லைன் வர்த்தகத்திற்கு ரூ 7 லட்சம் ரெடியாக வைக்குமாறும் கூறியுள்ளார்.
அதன்படி, கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் படிக்கட்டுத்துரை ராஜா ஆகிய இருவரும் கடையில் பணத்துடன் காத்திருந்துள்ளனர். அங்கு வந்த விக்னேஷ், கிருஷ்ணனிடம் ரூ.7 லட்சத்தை பெற்றுக் கொண்டு, இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் இந்த பணத்தில் லாபம் ஈட்டி இரு மடங்கு தருவதாகக் கூறி சென்றுள்ளார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் அவர் கூறிபடி பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. அத்துடன் வாட்ஸ்ஆப் காலில் போன் செய்தால் கட் செய்துவிட்டுள்ள அவர், வேறு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய போது, பணத்தை திருப்பித் தர முடியாது என கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த 05-06-2024 விக்னேஷ் கரூர் வந்ததை அறிந்து அவரை சந்தித்த கிருஷ்ணன், பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது, ஆபாச வார்த்தையில் பேசி கீழே இருந்த கல்லை எடுத்து கிருஷ்ணனை தாக்கியதில் காயமடைந்த கிருஷ்ணன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்டையில், விக்னேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விக்னேஷை கைது செய்த கரூர் நகர போலீசார். அவரை சிறையில் அடைத்தனர். இந்த, நிலையில், விக்னேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் புழல் சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருந்து வரும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கரூர் நகர காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் இரவு சவுக்கு சங்கரை அழைத்து வந்து கரூர் கிளை சிறையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று கரூர் குற்றவியல் நடுவர் பரத்குமார் முன்னிலையில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரிடம் விசரணை நடத்த 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்குமாறு அனுமதி கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பரத்குமார், 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.
அதேநேரம் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கரிகாலன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், “சிறையில் அளவில்லாத சித்திரவதைகளை அனுபவிக்கிறார் சவுக்கு சங்கர். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இன்றுவரை கட்டவிழ்க்க கூட சிறை மருத்துவமனைக்கு அவரை யாரும் அழைத்துச் செல்லவில்லை. சிறையிலேயே கட்டை பிரித்து பார்த்தபோது, அவருக்கு கை வீங்கியுள்ளது. இன்றுவரை எக்ஸ்-ரே கூட எடுக்கவில்லை அவர்கள்.
சவுக்கு சங்கருக்கு சர்க்கரை நோய் உள்ளது. ஆனால் அவருக்கு அதற்கான உரிய உணவு வழங்கப்படுவதில்லை. இவர் இருக்கும் அதே புழல் சிறையில்தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் இருக்கிறார்.
அவருக்கு அங்கு சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அவருக்கென தனி செல்ஃபோன்கூட வழங்கப்பட்டுள்ளது. DTH கனெக்ஷனும் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. தன்னுடைய கெஸ்ட் ஹவுஸ் போல சிறையை பயன்படுத்துகிறார் செந்தில் பாலாஜி. அங்கிருந்தபடி இந்த மாவட்டத்தையே செந்தில் பாலாஜிதான் இயக்கி வருகிறார். இதற்கெல்லாம் காரணம் ஐஜி கனகராஜ்தான்” என்றார்.