அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாக வழக்கு நடைபெற்று வந்தது. இதில் இரண்டு மற்றும் மூன்றாவது நபர்களான கருப்பசாமி மற்றும் முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் நபர் என கருதப்பட்ட நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 29) உறுதி செய்தது. ஆனால், அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நிர்மலா தேவியின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், நிர்மலா தேவி மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக சிறைத் தண்டனை பிறப்பித்து மொத்தம் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 2018 முதல் நிர்மலா தேவி சிறையில் இருந்து வருவதால், அந்த ஆண்டுகள் தவிர்த்து, மீதமுள்ள ஆண்டுகள் சிறையில் இருப்பார் எனத் தெரிகிறது.